நீட்டை ஒழிப்பதாகக் கூறி நம்பிக்கை துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது - அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே அனிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1176/1200 மதிப்பெண்களை எடுத்தும் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதாவின் எட்டாம் நினைவு நாள் இன்று . நீட் தேர்வு இல்லாவிட்டால் அனிதா மரணித்திருக்க மாட்டார்; மருத்துவராகியிருப்பார். நீட் தேர்வை ஒழிப்பது மட்டும்தான் அனிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
ஆனால், அனிதாவின் மரணத்தை அரசியல் மூலதனமாக்கி, ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் இன்று வரை நீட் தேர்வை ஒழிக்காமல், குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கூட பெறாமல் மாணவர் சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் செய்த துரோகத்தால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எல்லா காலமும் ஏமாற்றி விட முடியாது. நீட் தேர்வை கொண்டு வருவதற்கு துணை நின்றதுடன், அத்தேர்வை ஒழிப்பதாகக் கூறி நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை காலமும், வரலாறும் மன்னிக்காது. அவர்களுக்கான தண்டனையை வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.