ஓசூர் விமான நிலையம் - தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2026-01-18 12:22 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நகரமான ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஓசூர் நகரம் வான்வழிப் போக்குவரத்துக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரையே நம்பியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஓசூரைச் சுற்றியுள்ள 5 இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலையம் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 2 இடங்கள் சாத்தியம் என இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்தது. இதையடுத்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சிறப்பு ஆலோசகரை நியமித்து 2 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின்படி சூளகிரி வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடேஷ்புரம், மிடுதேப்பள்ளி, ஓசூர் வட்டத்துக்கு உட்பட்ட அரவனப்பள்ளி, முத்தாலி, அளேந்தம், பலவனப் பள்ளி, ஆத்தூர், காருப்பள்ளி, தாசனப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஓசூர் விமான நிலைய திட்டத்துக்காக 12 கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாய நிலம், வறண்ட நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றின் சர்வே எண்ணுடன் அரசின் நிர்வாக அனுமதியை பெற்றுத்தரக் கோரி கடந்த செப்டம்பரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், ஒசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ராணுவ மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்