மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரார்த்தனை செய்தேன் - அமித்ஷா
சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.;
சென்னை,
உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு மதுரை வருகை தந்தார். மதுரை ஒத்தகடையில் இன்று மாலை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அமித்ஷா வருகையை ஒட்டி மதுரையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை ரிங் ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை ஒட்டி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த்து தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பூஜை செய்ததில் மகிழ்ச்சி. நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், நமது குடிமக்களின் நல்வாழ்விற்கும் அன்னையின் ஆசிகளைப் பெற்று பிரார்த்தனை செய்தேன்.என தெரிவித்துள்ளார்.