தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது என சண்முகம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-29 01:58 IST

சென்னை,

சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்பட 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம். பல ஆண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது.

இதேபோல சத்துணவு ஊழியர்களின் காலவரைமுறை ஊதியம், சாலைப் பணியாளர்களின் போராட்ட காலத்தை பணிக் காலமாக வரைமுறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்து ஓய்வூதியர் அகவிலைப்படி பிரச்சினை ஆகியவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்