ஓசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.;

Update:2025-09-11 07:29 IST

கோப்புப்படம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் தனேஜா விமான ஓடுதளத்திற்கு காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் வருகிறார். அங்கு அவருக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து காலை 11.15 மணிக்கு ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலசை வந்தடைகிறார். அங்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும் அவர் எல்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அசென்ட் சர்கியூட்ஸ் நிறுவனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஓசூரில் தளி சாலையில் உள்ள ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு செல்கிறார். அங்கிருந்து மாலை 4 மணி அளவில் முதல்-அமைச்சர் காரில் புறப்பட்டு சூளகிரி பஸ் நிலையத்தை 4.30 மணிக்கு வந்தடைகிறார்.

அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் அங்கிருந்து குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்திற்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணி அளவில் டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர், கிருஷ்ணகிரியில் மதியழகன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு வருகிறார். அங்கு இரவு முதல்-அமைச்சர் தங்குகிறார்.

ஆடவர் கலைக்கல்லூரியில் அரசு விழா

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில் அரசு விழா நடக்கிறது. அதில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் விழா மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து முதல்-அமைச்சர் விழா பேருரையாற்றுகிறார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து கார் மூலம் ஓசூர் செல்லும் அவர் அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார். 

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் முதல்-அமைச்சர் வரும் பாதை, முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்