என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு: அமலாக்கத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?
என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது.;
சென்னை,
என்ஜினீயர்கள் நியமனத்துக்கு தலா ரூ.35 லட்சம் வசூலித்ததாக புகார் தெரிவித்து தமிழக டி.ஜி.பி.க்கு, அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் என்ஜினீயர்களை பணி நியமனம் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறை தன்னிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியது ஏன்?, வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை தனக்கு கிடைத்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. அதனால்தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஒருவேளை டி.ஜி.பி. உத்தரவின்பேரில் இந்த பிரச்சினை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தால் அந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை உடனடியாக மேல் நடவடிக்கையில் இறங்கும். அதுபோல்தான் இந்தியா முழுவதும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக நடந்த முறைகேட்டில் அவர் மீது முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை இறங்கியது நினைவுகூரத்தக்கது.