வளங்களைச் சுரண்டி, அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்கும் திமுக அரசு? - எடப்பாடி பழனிசாமி
கேரள நிறுவனத்தின் கனிம வளத் திட்டத்திற்கு துணை போகும் எண்ணத்தை கைவிட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறோம்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கேரளா மினரல்ஸ் & மெட்டல்ஸ் லிமிடட் (KMML) நிறுவனம், தமிழ்நாட்டில் தூத்துக்குடி- திருநெல்வேலி பகுதியில் 185 ஏக்கர் பட்டா நிலத்தில் கடற்கரை மணல் சார்ந்த கனிமங்களைச் சுரங்க முறையில் தோண்டி எடுக்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக தமிழக திமுக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வருகின்றன.
இந்த திட்டத்திற்காக, கேரள நிறுவனத்தின் அதிகாரிகள், தமிழகத்தில் உள்ள நிலங்களில் சோதனைகள் எல்லாம் நடத்தி, (Feasibility Report) உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, ஒரு Proposal சமர்ப்பித்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை எப்படி இங்குள்ள திமுக அரசு இவ்வளவு தூரம் அனுமதித்தது?
சமீபத்தில் தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, கேரள அமைச்சரை சந்தித்து, "God's Own Partnership" என்று பதிவிட்டு, பல்வேறு திட்டங்கள் வர உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அதில் முக்கியமான திட்டமாக இந்த கனிம வளச் சுரண்டல் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சரே தமிழ்நாட்டின் வளங்களை அண்டை மாநிலங்களைச் சுரண்ட விடுவது தான் "God's Own Partnership"-ஆ?
கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கழிவுகளும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிமங்களும்
செல்வது தான் God's Own Partnership-ஆ?
ஏற்கனவே இப்படி தான், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்டி எடுக்கத் துடித்து, பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினீர்கள். சட்டப்பேரவையில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மக்களின் குரலாக கர்ஜித்து, பொதுவெளியில் மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தியதால் கைவிடப்பட்டது.
மேலும் இதே போல் தான், மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோரின் தொடர் பேச்சுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுன நாடகம் நடத்தி, தமிழகத்தின் ஜீவாதார காவிரி உரிமை பறிபோகும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது இன்றைய ஸ்டாலின் அரசு.
இப்போதும் அதே போல, கனிம வளங்களைச் சுரண்ட மறைமுகமாக ஒரு சதிதிட்டத்தைத் தீட்டுகிறதா திமுக- கம்யூனிஸ்ட் கூட்டணி?
தமிழ்நாட்டின் வளங்கள் 100% தமிழ்நாட்டுக்கானது மட்டுமே! அவற்றை மற்ற மாநிலங்களுக்கு கூறு போட்டுத் தாரை வார்க்கத் துடிக்கும் வரலாற்றுத் துரோகத்திற்கு பெயர் போன திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
தூத்துக்குடி-திருநெல்வேலி கடற்கரை மணல் தொடர்பான கேரள நிறுவனத்தின் கனிம வளத் திட்டத்திற்கு துணை போகும் எண்ணத்தை முழுவதுமாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.