ஈஷா காவேரி கூக்குரல், பேரூர், தருமை ஆதீனங்கள் சார்பில் கோவில் காடுகள் திட்டம்!
கோவில் காடுகள் பரப்பளவில் பெருமளவு குறைந்து வருவதால் காவேரி கூக்குரல் மற்றும் பேரூர், தருமை ஆதீனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.;
நம் பாரத கலாச்சாரத்தில் மரங்கள் மற்றும் காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அறிந்து மக்கள் கோவில் காடுகளை உருவாக்கி பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வந்தனர். இந்த கோவில் காடுகளில் உள்ளூர் காவல் தெய்வங்களை மக்கள் வழிப்பட்டு வந்தனர். மேலும் கோயில் காடுகள் ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமில்லாமல், அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களின் புகலிடமாகவும் இருந்தது.
ஆனால் இன்று பல்வேறு காரணங்களால் கோவில் காடுகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. மீதமிருக்கும் கோயில் காடுகளும் அதன் பரப்பளவில் பெருமளவு குறைந்து வருகின்றன. இதனால் கோயில் காடுகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. இந்நிலை நீடித்தால் நம் சந்ததியினருக்கு எதிர்காலமில்லை.
இந்நிலையில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளன.
முன்னதாக பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா இன்று தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஆர். பாலாஜி பாபு மற்றும் காவேரி கூக்குரல் இயக்க திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், “சத்குரு கடந்த 2004-ஆம் ஆண்டு ‘பசுமை கரங்கள்’ என்ற இயக்கத்தினை துவங்கிய போது ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வைத்து வளர்த்தால் அது மக்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு நல்லது எனக் கூறினார்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடுவதை இலக்காக கொண்டு பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் அவர்களின் நூற்றாண்டு நிறவையொட்டி, தற்போதைய 25-ஆவது ஆதீனத்துடன் இணைந்து “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.” எனக் கூறினார்.