பயின்ற அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி

இஸ்ரோ மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது என்று பெண் விஞ்ஞானி கூறினார்.;

Update:2025-11-23 10:06 IST

தென்காசி,

கடந்த 2023-ம் ஆண்டு சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி.

இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தான் பயின்ற எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி வழங்கிய ரூ.8 லட்சத்துடன் சேர்த்து தமிழக அரசு சார்பில் ரூ.24 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.

Advertising
Advertising

விழாவில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டித்தை திறந்து வைத்தனர்.

பின்னர் நிகர் ஷாஜி கூறியதாவது:-

நான் பயின்ற பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரோவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதிப்புமிக்க விண்வெளி வீரர்களை பத்திரமாக விண்ணுக்கு கொண்டு சென்று, மீண்டும் அழைத்து வர பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க தீவிரமாக உழைத்து வருகிறோம். இஸ்ரோ மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்