கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.;

Update:2026-01-20 09:55 IST

சென்னை,

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் அவை கூடுவது வழக்கம். சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து, 4-வது ஆண்டாக அவர் வெளியேறியுள்ளார்.

கவர்னர் வெளியேறிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என அண்ணா கூறியிருந்தார். கவர்னர் வேண்டும் என்றே அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயலை செய்துள்ளார். அண்ணா, கருணாநிதி வழியில் இருந்து நானும் விலகவில்லை. கவர்னர் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்திற்குரியது. 

கவர்னரின் செயல்பாட்டை ஒருநாள் நடவடிக்கையாகக் கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரையாற்றுவது என்ற நடைமுறையை திருத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். உரையை கவர்னர் படித்ததாக இந்த அவை கருதுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை என்பதையே விலக்க, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.”இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்