உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல- மா.சுப்பிரமணியன்
நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்;
சென்னை,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. கரூர் பரப்புரைக்கு த.வெ.க. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர்.
காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39 பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-
இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகள் நடைபெற்றது. 28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின. உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார்.