அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை - கே.எஸ்.அழகிரி பேட்டி

சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.;

Update:2025-09-26 02:00 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மாபெரும் புரட்சி என்று பிரதமர் நரேந்திர மோடியும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கூறியுள்ளனர். 8 ஆண்டுகளாக குறைக்காத வரியை, தற்போது ஏன் குறைத்தார்கள். தேர்தலுக்காக தற்போது வரியை குறைத்துள்ளார்கள்.

கரூரில் காங்கிரஸ் கட்சி தலைவரை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்த்தது நாகரிகமான செயல் அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதசார்பின்மை கொண்ட அரசியல் இயக்கமாகும். எங்களது தலைவர் ராகுல்காந்தி அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய சிறந்த நண்பர்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம். வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது சமூக ஊடகங்களில் வரும் வதந்தியாகும்.

தி.மு.க.வினர் எங்களது கூட்டணி நண்பர்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது எங்களது உரிமை. அதனை எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் விசுவாசி என கூறுவது தவறானதாகும். நாங்கள் 110 இடங்களில் போட்டியிட்டவர்கள். தற்போது குறைவான இடங்களில் போட்டியிடுகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்