நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி
மதவாத அமைப்பினருக்கு சாதகமாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை, பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத்தில் மதவாத அமைப்பினருக்குசாதகமாக செயல்படும் நீதி அரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் டிசம்பர் 17-ம் தேதி காணொளி மூலம் ஆஜராக வேண்டுமென ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரு சர்வே தூணை தீபம் ஏற்றும் தூணாக உண்மைக்கு மாறாக, அரசியல் நோக்கோடு திரித்து வழக்கு தொடுத்துள்ள இந்துத்துவா அமைப்பினருக்கு சாதகமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதச் சார்பின்மைக்கும், மதநல்லிணக்கத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக அவர் உத்தரவை வழங்கியுள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு தவறானது. வரலாற்று உண்மைகளுக்கு எதிரானது. வழிபாட்டுத்தலங்கள் நிலை குறித்த 1991-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு முரணானது. இந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 என்பது ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியாவில் இருந்த வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்றாமல், அதன் நிலையை அப்படியே பராமரிப்பதற்கான ஒரு சட்டம் ஆகும். இச்சட்டத்தை மதிக்காமல், அதற்கு எதிராக, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இத்தீர்பை நடைமுறைப்படுத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், அதனை அமல்படுத்தாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். சட்ட ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி விலக்கம் செய்யக்கோரி மக்களவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளரும், ஏடிஜிபியும் காணொளி மூலம் ஆஜராக வேண்டும் என்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமன்றி மனுதாரர், மத்திய உள்துறை செயலாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கூறியதையும் ஏற்று, அதனையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்துள்ளார். இது ஆபத்தான அதிகார அத்துமீறல் ஆகும். இது மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நடவடிக்கையாகும்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் இத்தகைய இந்துவா அமைப்பினருக்கு சாதகமான போக்கை, மக்கள் ஒற்றுமைக்கு எதிரான, அரசியல் சட்டத்திற்கு எதிரானப் போக்கை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மதச்சார்பற்ற கட்சிகள், முற்போக்கு அமைப்பினர் ஓரணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.