கோவை: சேற்றில் சிக்கிய காட்டு யானை, 3 மணி நேரம் போராடி மீட்பு

காட்டு யானையை வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.;

Update:2026-01-26 08:24 IST

கோவை,

கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய வயதான பெண் காட்டு யானை கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகுந்தது. அந்த யானை அங்குள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை குப்பனூரில் உள்ள குடியிருப்பை ஒட்டி இருக்கும் கே.ஆர்.எஸ். கால்வாய் பகுதிக்கு அந்த யானை வந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜீப்பில் சென்றவாறு அந்த யானையை துரத்தினர். வயதானதால் அந்த யானையால் வேகமாக நடக்க முடியவில்லை. அது மெதுவாக அங்கிருந்து நடந்து சென்றது. அப்போது அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டம் வழியாக சென்றது. அந்த தோட்டத்தில் ஒரு கிணற்றை மூடுவதற்காக அதன் உரிமையாளர் மண் மற்றும் குப்பைகளை போட்டு நிரப்பி வைத்து இருந்தார். இன்னும் சில அடி ஆழத்துக்கு மட்டுமே அந்த கிணற்றை நிரப்ப வேண்டி இருந்தது.

சேறும், சகதியுமாக இருந்த அந்த பள்ளத்தை அந்த யானை கடக்க முயன்றபோது அதில் வசமாக சிக்கிக்கொண்டது. யானையின் 4 கால்களும் சேற்றில் சிக்கியதால் வெளியே வரமுடியவில்லை. அதில் இருந்து மீண்டு வர அந்த யானை கடுமையாக முயன்றும் முடிய வில்லை. இதன் காரணமாக அந்த யானை பிளிறியது. சோர்வடைந்து சேற்றிலேயே அது படுத்துக்கொண்டது. இது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அந்த யானையை சேற்றில் இருந்து மீட்க 3 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் சிறிய அளவிலான கிரேன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

பின்னர் அந்த யானையை சுற்றிலும் இருந்த சேற்றை பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இந்த மீட்பு பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த யானையை சேற்றில் இருந்து மீட்டனர்.

சேற்றுக்குள் 3 மணி நேரம் அந்த யானை தத்தளித்தபடி இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அத்துடன் யானைக்கு உணவு மற்றும் குளுக்கோஸ் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த யானையால் நிற்க முடியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் யானையின் வயிற்றில் பெல்ட் கட்டி அதை தூக்கி நிறுத்தினர். அந்த யானையை சாடிவயல் முகாமுக்கு கொண்டு செல்லலாமா அல்லது வனப்பகுதியில் விடலாமா என்று வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்