40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்

கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.;

Update:2025-10-06 11:11 IST

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் மண்டபம், கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அமைந்து உள்ளது. வைகாசி விசாகத் திருவிழாவின்போது 10 நாட்களும் அம்மன் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பழமையான இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். அதன் பிறகு அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்ட பிறகு அம்மன் இந்த மண்டபத்தில்இருந்து சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை தீப திருவிழா அன்று அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தை இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் நிறுத்தி வைத்து சொக்கப்பனை கொளுத்தி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும் பண்டைய காலத்தில் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவில் நடை அடைத்த பிறகு கோவிலில் வழங்கப்படும் கட்டுசோறு உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் மதிய வேளையில் தூங்கி இளைப்பாறுவது வழக்கம்.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை 8 கடைகள் கட்டி வியாபாரம் செய்வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் இந்த கன்னியம்பலம் மண்டபம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா காலங்களில் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை இடித்து அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வியாபாரிகள் கொதிப்படைந்தனர். கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அதிகாரிகள் வியாபாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சில நாட்கள் அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கடைகளை அப்புறப்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்