கார்த்திகை தீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-04 11:55 IST

நெல்லையப்பர் கோவில், சங்கரன்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை படத்தில் காணலாம்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள மகா மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

2-வது நாளான நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரருடன் சுவாமி- அம்பாள் சொக்கப்பனை முக்கிற்கு வந்தனர். அங்கு பரணி தீபத்தை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சொக்கப்பனை முக்கில் நிறுவப்பட்டிருந்த பெரிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சன்னதி எதிரே பாரதியார் தெரு முக்கில் ருத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், சிந்து பூந்துறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், மேலவாசல் முருகன் கோவில் உள்பட மாவட்ட முழுவதும் பல்வேறு கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சங்கரன்கோவில்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் காலையில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இரவில் சுவாமி சன்னதி, சங்கரலிங்க சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி ஆகிய சன்னதிகள் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில், பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்