கரூர் கூட்ட நெரிசல்; மருத்துவ பணியாளர்கள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர் - செல்வப்பெருந்தகை

இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-28 11:47 IST

கரூர்,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உற்றார், உறவினர்களை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற துயரத்தை இதுவரை பார்த்ததில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கரூர் துயர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி ஒருபோதும் ஏற்படக்கூடாது. அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

பாமர மக்கள், எதுவும் அறியாத அப்பாவிகள், வாக்கு உரிமை இல்லாத குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் காத்து நின்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மரணங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகப்பெரிய கொடுமை.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, நேற்று இரவே புறப்பட்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். சுகாதாரத்துறையின் பணி அருமையாக உள்ளது. மருத்துவ பணியாளர்கள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பு பாராட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்