கரூர் துயரம்: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.;
கரூர்,
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்து இருந்தனர்.
இதில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
தவெக கூட்டம் முடிந்த நேற்று முன் தினம் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் சுகுணாவை தேடியுள்ளனர். அப்போது கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.