‘காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து’ - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிருப்தி

கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.;

Update:2025-09-04 19:48 IST

மதுரை,

மதுரையை சேர்ந்த சசிகுமார், ரம்யா தம்பதியினர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மருத்துவ பொருட்களை வாங்கி, அதற்கான தொகையை செலுத்தாதது தொடர்பாக விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் மதுரை திலகர் திடல் காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்ததில், சுமார் 8 லட்சம் ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு உதாரணமாக திகழ்வதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும் திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றமாக செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்திருப்பதாகவும், இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு திலகர் திடல் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர துணை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்