சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;
கோப்புப்படம்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த 49 வயதானவர் தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி நதியா, பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கில் விசாரணையை முடித்து கடந்த 20-6-2021-ந்தேதி தஞ்சை போக்சோ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி தமிழரசி, சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.