லாரி உரிமையாளர்கள் போராட்டம் - சென்னை துறைமுகத்தில் போலீசார் குவிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.;
சென்னை,
சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், கனரக வாகனங்களின் தர சான்றிதழை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், மோட்டார் வாகன நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 9-ந்தேதி முதல் துறைமுகங்களுக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஒரு சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறி, வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தங்கள் கண்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், தொடர்ந்து துறைமுகங்களுக்கு லாரிகளை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், காசிமேட்டில் உள்ள ஜீரோ கேட் பகுக்தியில், துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் எப்.சி. கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.