கடல் கடந்த காதல்... இந்தோனேஷிய நாட்டு பெண்ணை கரம்பிடித்த திருவாரூர் வாலிபர்

2 பேரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.;

Update:2025-10-13 13:53 IST

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி வாசுகி. இவர்களுடைய மகன் யோகதாஸ் (வயது30). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் இந்தோனேஷிய நாட்டின் அமானுபன்பாரத் பகுதியை சேர்ந்த டேனியல் டிபு- மாதா நியோநானே தம்பதியின் மகள் டயானா டீபு (26) என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், யோகதாசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் டயானா டீபு யோகதாஸ் மீது காதல் வயப்பட்டார்.

தனது காதலை டயானா டீபு யோகதாசிடம் தெரிவித்துள்ளார். அவருடைய காதலை யோகதாசும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் ஜோடி 2 பேரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் காதல் விவரத்தை தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் கூறியுள்ளனர்.

டயானா டீபு இந்து முறைப்படி தமிழ் கலாசார அடிப்படையில் யோகதாசை கரம் பிடிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து இருவருக்கும் சிங்கப்பூரில் கடந்த மாதம் (செப்டம்பர்) திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர், நண்பர்கள், கிராம மக்கள் அனைவருக்கும் யோகதாஸ் கொடுத்தார்.

கடந்த வாரம் அவர் தனது சொந்த ஊரான முத்துப்பேட்டை அருகே உள்ள கரையங்காடு கிராமத்துக்கு டயானா டீபுவுடன் வந்தார். நிச்சயித்தபடி திருமணம் நேற்று அங்குள்ள கரை முத்து மாரியம்மன் கோவிலில் மிக எளிமையான முறையில் நடந்தது. பட்டு சேலை அணிந்து தமிழ்ப்பெண் போல் இருந்த டயானா டீபுவுக்கு யோகதாஸ் தாலி கட்டினார்.

தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் உறவினர்கள், கிராம மக்கள், நண்பர்கள் திரளாக பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்