மதத்தை கடந்து 7 வருடமாக தொடர்ந்த காதல்.. காதலி வீட்டில் எதிர்ப்பு.. ஐ.டி. ஊழியர் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

7 வருடமாக காதல் இனிமையாக சென்ற நிலையில், காதல் விவகாரம் இருவீட்டாருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது.;

Update:2025-06-20 03:04 IST

குலசேகரம்,

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள காவுவிளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி தனலெட்சுமி. இவர்களுடைய மகன் தனுஷ் (வயது 22). என்ஜினீயரிங் முடித்த இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

முன்னதாக இவர், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த போது அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். இவர் வேறு மதத்தை சேர்ந்தவர். மதத்தை கடந்து இருவரும் நேசித்தனர்.

பின்னர் அந்த மாணவி பிளஸ்-2 முடித்ததும் களியக்காவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தார். இதற்கிடையே தனுஷின் குடும்பத்தினர் கோவையில் குடியேறினர். வெவ்வேறு ஊருக்கு சென்றாலும், தனுஷ் தனது காதலை வளர்ப்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தார். அவ்வப்போது குலசேகரத்திற்கு வந்து காதலியை சந்தித்து வந்தார். இந்த பள்ளி பருவ காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது.

இதனைத்தொடர்ந்து தனுஷ் என்ஜினீயரிங் முடித்து கோவையில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்தார். அதே சமயத்தில் பட்டப்படிப்பு முடித்த காதலி, மேற்கொண்டு உயர்கல்வி படிக்க கோவையை தேர்வு செய்தார். கோவையில் படித்தால் காதலனை சந்திக்க வாய்ப்பு இருக்கும் என கருதி இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் காதலியின் பெற்றோருக்கு இது தெரியாது. கோவையில் காதல் ஜோடி சிறகடித்து பறந்தது. தங்களுக்கென்ற காதல் உலகத்தில் இருவரும் மெய்மறந்து வாழ தொடங்கினர்.

இவ்வாறு காதல் இனிமையாக சென்ற நிலையில், காதல் விவகாரம் இருவீட்டாருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. இந்த காதலை கடுமையாக எதிர்த்தனர். அதோடு நின்று விடாமல் காதல் ஜோடியை பிரிக்க காதலி குடும்பத்தினர் நினைத்தனர். இதற்காக மாணவியின் படிப்பை அவருடைய குடும்பத்தினர் பாதியில் நிறுத்தினர்.

மேலும் அவசர, அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர். இதனை அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். காதலியை கைபிடித்தே ஆக வேண்டும் என்பதில் தனுஷ் உறுதியாக இருந்தார். எனவே முறைப்படி வீட்டுக்கு சென்று பெண்ணும் கேட்டார். ஆனால் அதற்கு காதலி குடும்பத்தினர் செவி சாய்க்கவில்லை.

காதலியின் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதோடு அவளை சந்திக்கும் வாய்ப்பை தனுசுக்கு கிடைக்காமல் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். இதற்காக காதலியை வீட்டிலேயே சிறை வைத்தனர். செல்போனில் தனுஷ் தொடர்பு கொள்ளாதபடி மாற்று நடவடிக்கையில் களம் இறங்கினர். இது தனுஷின் மன நிம்மதியை நிலைகுலை வைத்தது. காதலியை சந்திக்க முடியாமல் பித்து பிடித்ததை போன்று சுற்றி திரிந்துள்ளார்.

இனியும் தாமதித்தால் காதலி கைகூட மாட்டார், அவரை சந்தித்து மணமுடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லையென்றால் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற அதிர்ச்சி முடிவை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு காதலியை தேடி அவருடைய ஊருக்கு வந்தார். காதலியை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவருக்கு தோல்வியே மிஞ்சியது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், காதலி தான் கிடைக்கவில்லை, அவருடைய வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து புறப்பட்டார். காதலி வீட்டின் சுற்றுப்புற சுவரில் ஏறி குதித்து மாடியில் ஏறினார். பிறகு அங்கு தூக்கு மாட்டி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.

நேற்று காலையில் மாடிக்கு சென்ற காதலி, அவருடைய தாயார், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காதலன் தன் கண்முன்னே பிணமாக தொங்குவதை பார்த்து மாணவி கதறி அழுதார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தனுஷின் பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டி, குலசேகரம் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்