ஒரு வாரத்தில் திருமணம்... பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாமுண்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு வருகிற 4-ந்தேதி திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக தனது உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக நாராயணன், தனது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் இருவரையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தவெக நிர்வாகி என கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பத்திரிகை கொடுக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.