அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் மேயர் பிரியா

படிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நன்கு படித்திட வேண்டும் என மாணவர்களிடம் மேயர் பிரியா கூறினார்.;

Update:2025-12-11 19:41 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-74ல் பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா அவர்கள், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்கள் முன்னிலையில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மேயர் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கல்வி ஒன்றே அழியாத செல்வம் என்று கூறி மாணவர்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்விக்கான திட்டங்களை வழங்கி, அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர் நெடுந்தூரம் சென்று கல்வி கற்கவும், குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தரவும் உதவியாக இந்த விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உள்ளார். முந்தைய காலக்கட்டத்தில் 2 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., எல்லாம் நடந்து சென்று கல்வி பயின்று இன்று பலர் நல்ல நிலையில் உள்ளனர். அவ்வாறான கடினமான சூழலை மாற்றி இன்றைக்கு எளிய முறையில் பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழலை தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார்கள்.

மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைக்கு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியும் செய்து கொடுத்துள்ளார்கள். இந்த மிதிவண்டிகளை பள்ளிக்கும் மட்டுமில்லாமல் சிறப்பு வகுப்புகள், கூடுதல் படிப்பிற்கான வகுப்புகள், அன்றாட தேவைகள் என்று யாரையும் சார்ந்திராமல் நீங்களே சென்று வர ஏதுவாக இந்த மிதிவண்டி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

படிப்பது மட்டும் தான் உங்களுடைய வேலை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பருவம் தான் இந்த மாணவப் பருவமாகும். மாணவர்கள் படிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நன்கு படித்திட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி தான் நமக்கு கை கொடுக்கும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, நீங்கள் நன்றாகப் படித்து முன்னேறிட வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்