மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்திற்கு 2023-ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.;
கோப்புப்படம்
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாக யூ-டியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மேட்டூர் அணை நிரம்பிய பிறகு அதன் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. நிலம் கையகப்படுத்தல், மின்இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான செலவு மற்றும் வடிவமைப்பு மாற்றம் காரணமாக 2023-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
பட்டா ஏரிகளைத் தவிர்த்து, 82 பொது ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்கட்டமாக 57 ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டது. மீதமுள்ள 25 ஏரிகளுக்கும் நீர்நிரப்பும் வகையில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.