‘புரட்சித் தலைவர்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. - எல்.முருகன் புகழஞ்சலி
சமூகச் சேவையிலும், மக்களிடையே அன்பு செலுத்துவதிலும் அவர் விட்டுச் சென்ற நினைவுகளை மறவாது போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் புரட்சி நடிகராக திகழ்ந்தவருமான ‘பாரத ரத்னா’ எம்ஜி ராமச்சந்திரனின் பிறந்த தினம் இன்று.
தான் நடித்த திரைப்படங்களின் மூலம், அரசியல் சார்ந்த விழிப்புணர்வையும் புரட்சிகரமான கருத்துக்களையும் மக்களிடையே விதைத்ததால், ‘மக்கள் திலகம்’ என்றும் ‘புரட்சித் தலைவர்’ என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில், பள்ளிகளில் சத்துணவு திட்டம் போன்ற கல்விக்கான நலத்திட்டங்கள், ஊழலற்ற நிர்வாகம், பெண்களுக்கான நலத்திட்டங்கள் என்று மகத்தான பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
‘பொன்மணச்செம்மல்’ அய்யா எம்ஜி ராமச்சந்திரனது 109 வது பிறந்த தினத்தில், சமூகச் சேவையிலும், மக்களிடையே அன்பு செலுத்துவதிலும் அவர் விட்டுச் சென்ற நினைவுகளை மறவாது போற்றுவோம்..!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.