சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
கவர்னர் உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் இருந்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் அவை கூடுவது வழக்கம். சட்டசபையில் பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.இந்த நிலையில், சட்டசபையிலிருந்து வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கவர்னர் உரையாற்றும் போது மைக் ஆஃப் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்ற விடவில்லை. உரையில் ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் உரையில் விடுபட்டிருந்தன. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என பலமுறை உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
பெரும்பாலான ஒப்பந்தங்கள் காகிதங்கள் அளவிலேயே உள்ளன. இளைஞர்களின் ஏதிர்காலத்தை சீரழிக்கும் போதை மருந்து விவகாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து துறை ஊழியர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. போதை காரணமாக ஓராண்டில் 2 ஆயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது கோவில்களில் நிலவும் நிர்வாக குளறுபடிகளினால் லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது
கல்வித் தரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகக் குழப்பம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. பகுதி நேர ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் போராட்ட மனநிலையில் உள்ளனர். இளைஞர்கள் உறுதியற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர். ஆனால் இந்த பிரச்சினையும் அரசை கவலைப்படுத்தவில்லை; உரையில் இடம்பெறவில்லை;
பல ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகள் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் செயலிழந்த நிலையில் உள்ளன. அவை அரசின் சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது அரசமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கும் ஆவிக்கும் எதிரானது. கிராம பஞ்சாயத்துகள் மீண்டும் செயல்பட மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இது பற்றியும் உரையில் ஒரு சொல்லும் இல்லை" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.