கள்ளக்குறிச்சி திருவிழாவில் பெண் பலி; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி திருவிழா வெடிவிபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம், தென்பெண்ணை ஆற்றில் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது பலூன்களை நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தை சேர்ந்த கலா (வயது 55) க/பெ. பரமசிவம் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 18 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.