லாரி மீது மினி வேன் மோதி விபத்து - பெண் உள்பட 3 பேர் பலி
கோவிலுக்கு சென்று திரும்பியபோது சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.;
சேலம்,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலம் (வயது 74). இவருடைய மகன் சுகுமார் (49), மருமகள் சுசீலா (45). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன் (54), இவருடைய மனைவி புவனேஸ்வரி (49). இவர்கள் இரு குடும்பத்தினரும் நேற்று காலையில் பவானி கூடுதுறைக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் மதியம் சாமி கும்பிட்டு விட்டு மினி வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேனை சுகுமார் ஓட்டி சென்றார்.
இந்த வேன் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெப்படை அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்னால் அந்த மினி வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் படுகாயம் அடைந்த கமலம், சுகுமார், மோகன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுசீலா, புவனேஸ்வரி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், டிரைவர் சுகுமார் தூங்கிவிட்டதால் விபத்து நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.