ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.;

Update:2025-11-10 10:01 IST

சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கேரள மாநிலத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாக கூறி, தமிழக ஆம்னி பஸ்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை என ஒரே நாளில் ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்தார்.

இதற்கிடையே குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஏராளமான ஆம்னி பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று குமரி-கேரள எல்லையான களியக்காவிளை, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்கள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன. ஆம்னி பஸ்களின் போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

இதற்கிடையில், மாநில அரசுகளின் அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் 600 பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் ஓடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்திற்குள் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்