சிறுமி வன்கொடுமை வழக்கு: பிடிபட்ட நபரிடம் விசாரணை - ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது என்று ஐஜி அஸ்ரா கர்க் கூறியுள்ளார்.;

Update:2025-07-25 22:43 IST

சென்னை,

திருவள்ளூர் அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜூலை 12ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், திடீரென அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்தார்.இது தொடர்பான வழக்கில், குற்றவாளியை கைது செய்ய, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள் அடங்கிய 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடந்து வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டிய போது, அவர் குற்றவாளியை உறுதி செய்தார். இதனையடுத்து மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது. முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் - இளைஞரை சிறையிலடைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 30 வயது இருக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. முக்கியமான வழக்கு என்பதால் முறையான விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு முழு விவரங்கள் அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்