இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய அரங்கத்தினை நாளை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

இமானுவேல் சேகரன் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்.;

Update:2026-01-16 12:27 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், வருகின்ற 17.01.2026 அன்று நண்பகல் 12.00 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் ராமநாதபுரம் மாவட்டம், செல்லூர் கிராமத்தில் வேதநாயகம் – ஞானசுந்தரி தம்பதியருக்கு மகனாக 09.10.1924 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியினை பரமக்குடியிலும், உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரத்திலும் பயின்றார். தமது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். 1950ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1954ஆம் ஆண்டு இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று மறைந்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டினையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்