சிவகங்கை: சர்க்கரை ஆலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு

ஆலையில் உள்ள எந்திரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.;

Update:2026-01-16 12:10 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த படமாத்தூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சில ஊழியர்கள் ஆலையில் உள்ள எந்திரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆலையில் பணிபுரியும் கரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 35), சிவகங்கையை சேர்ந்த பொன்னழகு (58) ஆகியோர் ஆலையில் உள்ள மொலாசஸ் என்ற திரவப்பொருளுக்கான தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மோகனசுந்தரம் முதலில் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது அதில் இருந்து வெளியான விஷவாயு அவரை தாக்கியது. இதில் அவர், உள்ளேயே மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னழகு அவரை காப்பாற்ற உள்ளே இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் அவரும் மயங்கி விழுந்தார். 2 ஊழியர்களும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. பின்னர் தொட்டியில் இருந்த விஷவாயுவை வெளியேற்றி 2 பேரையும் மீட்டனர்.

தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மோகனசுந்தரம், பொன்னழகு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் திருப்பாச்சேத்தி போலீசார், 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் சர்க்கரை ஆலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்த தகவல் அறிந்து, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆலை நிர்வாகத்தின் சார்பில் மோகனசுந்தரம், பொன்னழகு குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்