திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;

Update:2025-11-11 15:36 IST

சென்னை மாவட்டம், தங்கசாலை, ஏகாம்பரேசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சைதாப்பேட்டை காரணீசுவரர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயில், தருமபுரி மாவட்டம், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்கள் சார்பில் ரூ.10.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை. இரவிச்சந்திரன், பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோயில்களை  புனரமைத்து குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளோடு, திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களை பாதுகாத்திடும் வகையில் தமிழர் திருநாளை முன்னிட்டு 2 இணை புத்தாடைகள்/சீருடைகள், துறை நிலையிலான மற்றும் சேமநல நிதியின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்வு, பொங்கல் கருணைக் கொடை, குடும்ப நலநிதி உயர்வு, ஒருகால பூசைத் திட்ட அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, அவர்தம் பிள்ளைகள் உயர்கல்வி பயில ரூ.10,000/- கல்வி உதவித்தொகை, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள், கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 632 குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. அவற்றில் 95 அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் நிறைவு பெற்றுள்ளன. அவற்றிற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்