தூத்துக்குடியில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காவல் கட்டுப்பாட்டு அறை: கலெக்டர், எஸ்.பி. திறந்து வைத்தனர்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் எல்லை சோதனைச் சாவடிகளான கோடாங்கிபட்டி, வேம்பார், தோட்டிலோவன்பட்டி, பருத்திகுளம், செய்துங்கநல்லூர், இடைச்சிவிளை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் ANPR (Automatic Number plate Recognition) எனப்படும் வாகன எண்களை தானியங்கி முறையில் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் 2 தொழில்நுட்ப கேமராக்களும் மற்றும் VF (Varifocal Lens Camera) கேமரா எனப்படும் காட்சிகளை துல்லியமாக Zoom செய்து பார்க்கக்கூடிய 2 தொழில்நுட்ப CCTV கேமராக்களும் அதனை கண்காணிக்க கணினி திரையும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அவை நேரடியாக மேற்சொன்ன நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை கண்காணிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் GPS பொருத்தப்பட்ட காவல் இருசக்கர ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (Highway patrol) மற்றும் காவல் நிலைய நான்கு சக்கர ரோந்து வாகனங்களை நேரடியாக கண்காணிக்கவும், மாஸ்டர் கன்ட்ரோலுக்கு வரும் புகார் அழைப்பிற்கு செல்லும் ரோந்து வாகனங்களை இங்கிருந்தபடியே 2 கணினி திரையில் live Navigation Map மூலம் கண்காணிக்கவும், காவல் நிலைய போலீசார் ரோந்து செல்லும் இடங்களின் விபரங்களை ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் நேரடியாக கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.
மேலும் காவல்துறையினருக்கு மைக் மூலம் கொடுக்கும் தகவல் தொடர்பை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையும் மற்றும் முக்கிய திருவிழா நேரங்களிலும், முக்கிய பாதுகாப்பு பணிகளிலும் காவல்துறை ட்ரோன் (Drone Camera) கேமரா காட்சிகளை இங்கிருந்து நேரடியாக கண்காணிக்கும் வசதியும் இந்த நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைக்கப்பட்டு முதற்கட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் அடுத்த கட்டமாக மீதமுள்ள மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்கள், சந்திப்புகள் ஆகியவற்றில் மேற்சொன்ன ANPR கேமராக்கள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேற்சொன்ன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தூத்துக்குடி காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி., ஊரக ஊட்கோட்ட டி.எஸ்.பி. உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.