பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பள்ளி சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) என்ற மாணவர் இன்று (16.12.2025) மதியம் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.