நாமக்கல்: ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
ரூ. 89.22 கோடி மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (10.7.2025) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 39 திட்டப்பணிகளை திறந்து வைத்து,ரூ. 89.22 கோடி மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,099 பயனாளிகளுக்கு ரூ.40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ரூ. 40.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், பதிவுத்துறையின் சார்பில் ரூ. 1.97 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தத்தாதிரிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் 1 அறிவியல் ஆய்வகக் கட்டடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஓ.சௌதாபுரம், கல்லாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா மருத்துவ கட்டடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.6.13 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை பொருட்கள் சேகரிப்பு மையம், அங்கன்வாடி மையம், உணவு தானிய கிடங்கு, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம், ஊராட்சி செயலர் அலுவலகம், துணை சுகாதார நிலைய கட்டிடம், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.77.25 லட்சம் மதிப்பீட்டில் பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகத்துடன் கூடிய வகுப்பறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவாரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கொல்லிமலை வட்டாரம், வாழவந்திநாடு ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடி கட்டிடம் என மொத்தம் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் 39 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், குழந்தைநேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டம், இலங்கைத் தமிழர் நலன் திட்டங்களின் கீழ் ரூ.57.35 கோடி மதிப்பீட்டில் 111 பணிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட 2 பணிகளுக்கும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.25.50 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், தார் சாலை, அறிவுசார் மைய கட்டடம் உள்ளிட்ட 25 பணிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், கிராம அறிவுசார் மைய கட்டடம் ஆகிய 3 பணிகளுக்கும் என மொத்தம் ரூ.89.22 கோடி மதிப்பீட்டில் 141 பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.38 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், திறன்பேசி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஆவின் பாலகம் அமைக்க மானிய உதவித்தொகையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,691
பயனாளிகளுக்கு ரூ.23.94 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வரன்முறை திட்டத்தில் நகர்புற வீட்டுமனை பட்டாக்கள், இ- பட்டா, விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9.34 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவியினையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.65.40 லட்சம் மதிப்பீட்டில் ஆட்டோக்கள் வாங்குவதற்கான மானியம், வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு ஆணை மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 119 பயனாளிகளுக்கு ரூ.11.77 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டி, விலையில்லா தையல் இயந்திரம், முஸ்லீம் முகளிர் உதவும் சங்கம் சார்பில் நலிந்தோர் நல உதவிகள், சீர்மரபினருக்கான நலவாரிய அடையாள அட்டை, கிறிஸ்துவ நல வாரிய அடையாள அட்டை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.52.66 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளையும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், தாட்கோ துறையின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.54.90 லட்சம் மதிப்பீட்டில் கண்கண்ணாடி, பட்டப்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு, மேல்நிலை படிப்பு, திருமணம் உதவித் தொகை, சுமை வாகனம், சுற்றுலா வாகனம், கறவை மாடு வாங்க மானியம், இலவச துரித மின் இணைப்பு ஆகிய நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.32.26 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் என இவ்விழாவில் மொத்தம் 2,099 பயனாளிகளுக்கு ரூ.40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வி.எஸ்.மாதேஸ்வரன், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.