ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு மே, அக்டோபர் மாதங்களில் வெளியாகும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.;

Update:2026-01-25 16:54 IST

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு தொடர்பான அறிவிப்புகள் ஆண்டு அட்டவணையாக வெளியிடப்படும். அந்தவகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது.

அதில் ஒவ்வொரு பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதற்கான தேர்வும் எப்போது நடைபெறும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே வெளியிடப்பட்ட அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூன் மாதத்தில் நடக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும், தேர்வு ஜூலை மாதத்தில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்திலும், தேர்வு ஆகஸ்டு மாதத்திலும் நடக்கும் எனவும், செட் தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலையில் வெளியிடப்பட்டு, செப்டம்பரில் தேர்வு நடைபெறும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு மே மாதங்களில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வு ஜூலையிலும், அடுத்ததாக அக்டோபரில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு டிசம்பரிலும் தேர்வு நடைபெறும் என ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு இந்த அட்டவணையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இதில் இடம் பெறவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்