கஞ்சா விற்ற வழக்கில் கைதான போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தெரிந்து விட்டதால், நசீர் அகமது தலைமறைவானார்.;

Update:2026-01-25 17:15 IST

ஊட்டி,

தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளதால், நீலகிரியில் கஞ்சா விற்பனை அதிக அளவு உள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், கஞ்சா பயன்பாட்டை முற்றிலும் தடுக்க முடியவில்லை.

இந்தநிலையில் ஊட்டியில் கடந்த 21-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊட்டியை சேர்ந்த குரூஸ் (வயது 26) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா விற்பனையில் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நசீர் அகமது (26) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தெரிந்து விட்டதால், நசீர் அகமது தலைமறைவானார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, கோவையில் வைத்து போலீசார் கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் வைத்து நசீர் அகமதுவிடம் விசாரணை நடத்தினர். இதில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டத்தொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கோட்டத்தொரைக்கு சென்று, மோகனசுந்தரத்தை கைது செய்தனர். அங்கு சோதனை செய்தபோது 17½ கிலோ கஞ்சா சிக்கியது. இந்த வழக்கில் போலீஸ்காரர் நசீர் அகமது, குரூஸ், மோகனசுந்தரம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான நசீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்