திருவண்ணாமலைக்கு வந்த நேபாள நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பாதிக்கப்பட்ட பெண் அவரது நாட்டு தூதரகத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அது மட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்துள்ள கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்களை காணவும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் தங்கி இருந்த நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலை பகுதியில் உள்ள ஒரு பூக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த பெண் அவரது நாட்டு தூதரகத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தூதரகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையிலான திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த சேட்டு (வயது 40) என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றது தெரியவந்தது. அதன் பின்னர் அவரை டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.