மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்தை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டி.எஸ்.பி.யாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். வழக்கில் இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.