புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கோரிக்கை

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர், மாமனார்-மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-07-03 13:57 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபர். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர்களுடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக அண்ணாதுரை கூறியுள்ளார். முதற் கட்டமாக திருமணத்தின் போது, 100 பவுன் நகையும், ரூ.62 லட்சத்தில் சொகுசு காரும் வாங்கி கொடுத்து உள்ளனர். அதன்பிறகு 200 பவுன் நகையை எப்போது கொடுப்பார்கள் என்று கவின்குமார் மனைவியிடம் கேட்டு அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாமனார், மாமியாரும் சேர்ந்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த ரிதன்யா கடந்த 28-ந்தேதி வீட்டை விட்டு காரில் சென்று, செட்டிபுதூர் பகுதியில் விஷம் குடித்து, காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி ரிதன்யாவின் கணவரும், மாமனாரும் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் ஆஜாராகி, தற்கொலை குறிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை; தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

எனவே குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு உள்ளது. போலீசார் விசாரணை சரியாக நடக்கவில்லை என புகார்தாரர் கருதுகிறார். 3-வது குற்றவாளியான மாமியாரை காவலில் எடுத்து விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். மேலும் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று நீதிமனறத்தை நாட உள்ளனர் என்று வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்த கொண்ட நீதிபதி ஜாமீன் மது மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்து வழக்கை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்