‘ரெயில்வே துறையில் புதிய கட்டமைப்புகள்’ - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ‘வந்தே பாரத்’ ரெயில் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.;
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இன்று புதிதாக தயாரிக்கப்பட்ட நான்கு ‘அம்ரித் பாரத்’ விரைவு ரெயில்களை, பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கின்ற இந்த ரெயில்களில், தமிழகம்-மேற்கு வங்கம் மற்றும் அவற்றிற்கு இடையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் ரெயில்கள் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜல்பைகுரி-நாகர்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையிலான இரண்டு ரெயில்களானது, தொழில் மற்றும் ஏனைய பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமைகின்றது.
மேலும், மேம்பட்ட மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ‘வந்தே பாரத்’ ரெயிலும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டு மக்களின் தேவை உணர்ந்து, ரெயில்வே துறையில் புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் நாட்டு மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.