சொத்துகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில்
சோதனையின்போது பூட்டை உடைத்து திறக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.;
சென்னை,
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு , அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை எதிர்த்து, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் எதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது? , விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவில் ஒரு சொத்துக்கு சீல் வைக்க, அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? சீல் வைக்க எந்த சட்ட விதி அனுமதித்தது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, "சொத்துகளுக்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டம்(பி.எம்.எல்.ஏ.) பிரிவு 17-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, சோதனையின்போது பூட்டை உடைத்து திறக்க அதிகாரம் உள்ளது. ஆனால் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அத்தகைய நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், மனுதாரர்களின் வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை திரும்பப் பெறவும், கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் திருப்பித் தரவும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இடைக்கால மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, பிரதான மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.