கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை: மகனுக்கு வைத்த குறியில் தந்தை சிக்கிய பரிதாபம்

கவுசல்யாவுக்கும், விவேக்கிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-12-12 10:24 IST

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள திருவையாறை அடுத்த அல்லூர் அல்சக்குடி மேல காலனி தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் விவேக்(24). இவர், டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் அருண்குமார்(28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவரது மனைவி கவுசல்யாவுக்கும்(24), விவேக்கிற்கும் கடந்த 6 மாதமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அருண்குமார் தனது உறவினர்கள் தமிழ்ச்செல்வன்(30) முத்தமிழ்செல்வன்(25) ஆகியோருடன் குடிபோதையில் விவேக் வீட்டிற்கு சென்று உள்ளார். விவேக்கை வீட்டில் இருந்து வெளியில் வருமாறு சத்தம் போட்டு தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து மூர்த்தி மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் வெளியே வந்தனர்.

அப்போது தமிழ்ச்செல்வன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் அரிவாளால் விவேக்கை வெட்ட முயன்றனர். அப்போது குறுக்கே வந்த விவேக்கின் தந்தை மூர்த்தியின் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு, நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முகமது நிவாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மூர்த்தியின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், முத்தமிழ்செல்வன் உள்பட 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் மகனுக்கு வைத்த குறியில் தந்தை சிக்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்