சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
முதல் கட்டமாக 10 கோட்ட பொறியாளர்களுக்கு வாக்கி டாக்கிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழை 16.10.2025 அன்று தொடங்கி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருவதால், இன்று (22.10.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னை ஓ.எம்.ஆர் சாலையான பெருங்குடி, ஒக்கியம் மடுவு, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சாலைகள், மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெருங்குடி பகுதியில் முதல் கட்டமாக 10 கோட்ட பொறியாளர்களுக்கு வாக்கி டாக்கிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளார்களை சந்தித்து;
நெடுஞ்சாலைத்துறை மூலமாக, சென்னை பெருநகர மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி ஆகிய மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 613 கி.மீ. நீளச் சாலைகள் பராமரிக்கப்படுகிறது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 423 கி.மீ. நீளமுடைய மழைநீர் வடிகால், 18,000 சில்ட் கேட்ச் பிட், 752 சிறுபாலங்கள், 39 சிறிய பாலங்கள், 20 பெரிய பாலங்கள் ஆகியவையும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
பரங்கிமலை சுரங்கப்பாதை, கத்திப்பாரா சுரங்கப்பாதை, மீனம்பாக்கம் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை, தர்கா சுரங்கப்பாதை, கத்திவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய 7 வாகன சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 7 வாகன சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில், அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி இயந்திரங்களும், மின் மற்றும் டீசல் பம்புசெட்களும், ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன என்றும், 34 வெள்ள ரோந்து குழுக்கள் 24/7 நேரம் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 500 சிறப்பு சாலைப் பணியாளர்கள் வெள்ளப் பணியினை மேற்கொள்வார்கள் என்றும், கோட்டம், வட்டம் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் அலுவலகத்தில் வெள்ள பாதிப்பினை எதிர்கொள்ள 24 மணிநேரமும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
10 வட்டங்களுக்கும் தலைமைப் பொறியாளர்கள் நிலையில் கண்காணிப்புப் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 15 இடங்கள் அதிகம் பாதிப்படையும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 21 ராட்சஷ மோட்டடார்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், OMR சாலையில் ஒக்கியம் மடுவு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதால் மழைநீர் தேங்காமல் தடுக்கவும், 17 சென்டிமீட்டர் மழை பெய்தாலும், ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் அளவிற்கு ராட்சஷ மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலையில் பள்ளிக்கரனை சதுப்புநிலம் சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து, நேரடியாக பக்கிஹாம் கால்வாயினை சென்றடையும் வகையில் பெரிய மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவு பெற்றவுடன் மழைநீர் வடிய ஏதுவாக இருக்கும் என்றும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த களஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர் ரா.செல்வராஜ், திட்ட இயக்குநர்
தெ.பாஸ்கரபாண்டியன், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் ரா.சந்திரசேகர், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.