தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள் - திருப்பூர் ரெயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-10-16 17:18 IST

திருப்பூர்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்க்ள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், திருப்பூரில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது தீபாவளியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றைய தினம் எர்ணாகுளம்-தன்பாத் ரெயிலில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போட்டிப்போட்டு இடங்களை பிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் பலர் ஏறி பயணம் செய்தது தொடர்பான வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இன்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதர்கள் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, முன்பதிவு பெட்டியில் டிக்கெட் இல்லாமல் யாரும் ஏறக்கூடாது என ஸ்பீக்கர் மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதே சமயம், ரெயில் பெட்டிகளில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறியவும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Full View
Tags:    

மேலும் செய்திகள்