அடுத்தடுத்து விலகும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்: மீண்டும் அதிமுகவில் இணையும் எம்.பி.?

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தர்மர் எம்.பி. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2026-01-24 10:54 IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுப்பட்ட அதிமுக என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

இதற்கிடையே சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிக்கு தாவி வருகிறார்கள்.

மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் சேர்ந்தனர். குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தர்மர் எம்.பி. அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மர் கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர் அவருடன் கை கோர்த்து செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலையில் தர்மர் எம்.பி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்