இறுதி வடிவம் பெறும் தி.மு.க. கூட்டணி: யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும்.
இறுதி வடிவம் பெற்ற கூட்டணி
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது. பா.ம.க. ராமதாஸ் அணியையும், தே.மு.தி.க.வையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படாத நிலையில், தி.மு.க. கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.
ராமதாஸ் அணி, தே.மு.தி.க.
பா.ம.க. ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.வும் தி.மு.க. கூட்டணியில் தான் கைகோர்க்கப்போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள, இடம்பெறப்போகும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அப்போதைய எண்ணிக்கையிலான தொகுதிகளே மீண்டும் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. புதிதாக இணைந்த மற்றும் இணையும் கட்சிகளுக்கே தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கின்றன.
இறுதி வடிவம் பெற்றுள்ளதாக கூறப்படும் தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தொகுதிகளின் விவரம் வருமாறு:-
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2
இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.